மனித உடல் உறுப்பு தானமும், கிள்ளி எறிய வேண்டிய மோசடிகளும்

  • ஆர்.மணி
  • மூத்த பத்திரிகையாளர்
உடல் உறுப்பு தானம்

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )

தொடர்ந்து நான்காவது முறையாக மனித உடல் உறுப்பு தானத்தில் (Human Organ Donation) இந்தியாவிலேயே சிறந்த முதல் மாநிலமாக தமிழகம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி புது தில்லியில் சமீபத்தில் நடைபெற்றது. 2008 ம் ஆண்டிலிருந்து இதுவரையில் தமிழகத்தில் 1,198 இறந்த மனிதர்களிடம் இருந்து அவர்களது 6,886 உடல் உறுப்புகள் சில ஆயிரக் கணக்கான மனிதர்களுக்கு பொறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் மனித உடல் உறுப்பு தானம், 1962 ம் ஆண்டே தொடங்கியது. ஆனால் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவரவர் இஷ்டம் போல உடல் உறுப்பு மாற்று சிகிச்சளைகள் நடக்கத் தொடங்கின. வழக்கம் போல இதிலும் பண வசதி உள்ளவர்களுக்கு சாதகமாகவே இது நடந்து கொண்டிருந்தது. வசதியற்றவர்களும், வறியவர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். 1994-ஆம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சயை முறைப்படுத்தும் அகில இந்திய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. முறைகேடுகளை கட்டுப்படுத்த தமிழகம் இந்த சட்டத்தை கொண்டு வந்தது. ஏனெனில் 2000 ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரையிலும் உடல் உறுப்பு தானத்தில் மோசடிகள் பெரியளவில் பல்கிப் பெருகியதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சாசனம் மத்திய அரசின் துறைகள், மாநில அரசின் துறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு துறைகள் (Central List, State List and Concurrent List) என்று அனைத்து துறைகளையும் முறைப்படுத்தியுள்ளது. அதன்படி சுகாதாரம் என்பது மாநில அரசின் துறையாகும் (State List). ஆகவே இந்த விஷயம் முழுக்கவும் மாநில அரசு சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் மாற்று உடல் உறுப்புகள் பெறுவதற்கு என்று ஒரு பட்டியல் (Registry) அரசால் பராமரிக்கப் படுகிறது. இதில் உடல் உறுப்பு தேவைப்படுபவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் உடல் உறுப்புகளை பெற முடியும். இஷ்டம் போல பணக்காரர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் உடல் உறுப்புகளை பெறுவதை தடுப்பதற்கும், குறிப்பாக ஏழை மக்கள் இதில் பாதிக்கப் படாமல் இருப்பதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என்று இரு தரப்புக்கும் பொறுந்தும்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் இதில் முறை கேடுகள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.

உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம், NHS Blood and Transplant

தமிழகத்தில் 2017 ம் ஆண்டில் மட்டும் இருதய மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 25 சதவிகதத்தினர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 33 சதவிகிதத்தினர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இது குறித்த துல்லியமான புள்ளி விவரத்தை பெற்ற மத்திய அரசின் தேசீய உடல் உறுப்பு மாற்று அமைப்பின் இயக்குநர் (Director, National Organ and Tissue Transplant Organisation or NOTTO) பேராசிரியர் விமல் பண்டாரி இந்த நிகழ்வை கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்; ''இந்திய இதயங்கள் சக இந்தியர்களுக்கு பொறுந்துவதை விட வெளிநாட்டினருக்கு அதிகமாக பொறுந்தியிருக்கிறது. இதனை ஜீரணிப்பது கடினமானதாக இருக்கிறது.

இது எப்படி சாத்தியமாகும்? இந்திய பணத்தை விட வெளிநாட்டு பணம் அதிகமாக சம்மந்தப்பட்ட வர்களுக்கு பொறுத்தமனாதாக இருக்கிறது போலும். சொல்லுவதற்கு வருத்தமாக இருக்கிறது … வறுமையில் வாடும் இந்திய நோயாளிகளுக்கு உதவுவதை விட வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவும் அளவுக்கு பேராசைக்காரர்களாக மாறி விட்டோம்''.

கடந்த மே மாதம் நடந்த ஒரு சம்பவம் உடல் உறுப்பு தானத்தில் நடக்கும் மோசடியை வெளிக் கொண்டு வந்தது. கேரளாவை சேர்ந்த பி.மணிகண்டன் தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழக்கிறார். அவரது உடல் உறுப்புகள் ஒரு தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்டு வேறு சிலருக்கு பொறுத்தப்பட்டு விடுகின்றன.

மணிகண்டனின் சிறு நீரகங்கள், கண்கள், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அவரது உறவினர்களின் சம்மதம் பெறாமலேயே எடுக்கப்பட்டு வேறு சிலருக்கு பொறுத்தப் பட்டு விட்டன. விவகாரம் சூடு பிடித்தவுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதுகிறார். தமிழக அரசு உடனடியாக இந்த சம்பவம் பற்றி ஆராய ஒரு விசாரணைக்கு உத்திரவிட்டது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் மனித உடல் உறுப்பு தானம் தொடங்கியது. இதில் பல பரிசோதனைகளை வெளிநாட்டு மருத்துவர்கள் செய்யத் துவங்கினர். உடல் உறுப்பு தானத்தில் பல பரிசோதனைகளை வெற்றிகரமாக செய்ததற்காகவே, பிரான்ஸை சேர்ந்த டாக்டர் அலெக்சிஸ் காரெல் என்பவருக்கு 1912 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (World Health Organization or WHO) பல வழிகாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கிறது. அதில் கீழ்கண்ட முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன.

1. சம்மந்தப்பட்டவரின் உடல் உறுப்புகள் அந்தந்த நாட்டு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டே எடுக்கப்படவேண்டும்.

2. உடல் உறுப்புகளை எடுப்பதற்காகவே பாதிக்ப்பட்டவரின் மரணம் நிகழவில்லை என்று தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவர் சான்றிதழ் தர வேண்டும்.

3. பணத்திற்காக உடல் உறுப்புகள் எடுக்கப்படவில்லை மற்றும் பெறப்படவில்லை என்று தகுந்த சான்றிதழ் அந்தந்த நாட்டில் இயங்கும், இதற்கான, பிரத்தியேக அமைப்புகளிடம் இருந்து பெறப்பட வேண்டும்.

4. வயது வராத மைனர்களின் உடல் உறுப்புகள் எந்த காரணத்தை கொண்டும் உறுப்பு தானத்துக்காக எடுக்கப்படக் கூடாது.

5. இறந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பொருத்தப்படும் போது, அதன் பயனாளிகள் முழுக்கவும், மருத்துவ தேவைகளின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பணத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு காரணங்களின் அடிப்படையிலோ பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் படக்கூடாது.

இந்த விவகாரம் பற்றி என்னுடைய நீண்ட நாள் நண்பர் டாக்டர் ஜி.ரவீந்திரநாத்திடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் (Doctors Association for Social Equality or DASE) என்ற அமைப்பின் பொது செயலாளராக இருந்து கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் அவரது கருத்துக்கள் முக்கியமாக அனைவரும் கவனிக்கத் தக்கதாக இருக்கின்றன. அவரது கருத்துக்களை நாம் சுருக்கமாக இப்படி பார்க்கலாம்;

''இந்தியாவிலேயே மனித உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கடந்த பத்தாண்டுகளாக முன்னணியில் இருக்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் தேவையில்லை.. ஆனால் தற்போது தமிழகம் உள்ளிட்ட சில இந்திய மாநிலங்கள் மனித உடல் உறுப்புகளுக்கான உதிரிபாக கடையாக (Human Organ Spare parts shop) மாறிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு நோயாளிகளை விட வெளிநாட்டு நோயாளிகளுக்கு உடல் உறுப்பு தானத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் மிக சிறந்த தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. சுகாதார துறை கிட்டத்தட்ட முற்றிலுமாக தனியார் மற்றும் கார்ப்பொரேட் மயமாகி போன சூழலின் எதிர் வினையான மற்றுமோர் வெளிப்பாடு (Negative impact of privatization and corporatization of health sector) என்றே இதனை பார்க்க வேண்டும்'' என்று கூறினார்.

மனித உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்குவதில் முக்கியமான காரணங்கள் இருக்கின்றன, அதில் ஆச்சரியமான காரணங்களும் அடங்கும் என்றே நாம் சொல்லலாம் என்று கூறும் ரவீந்திரநாத் அதனை இப்படி விவரிக்கிறார். ''அடிப்படையில் பகுத்தறிவு கொள்கைகளை பரந்துபட்ட அளவில் ஏற்றுக் கொண்ட சமூகம் தமிழ் சமூகம்.

மனித வாழ்வின் முக்கிய விஷயங்களை பகுத்தறிவால் புரிந்து கொண்டு, அதனடிப்படையில் இங்கு அரசியல் வளர்ந்தது, தேர்தலில் வென்று கட்சிகளும் ஆட்சியை பிடித்தன. அந்த பின்புலத்தை கொண்டு பார்க்கும் போது உறுப்பு தானத்தில் நாம் சிறந்து விளங்குவது சரியான கோணத்தில் நமக்கு புரியும்'' என்கிறார்.

இதனைத் தாண்டி வேறு சில சமகால நிகழ்வுகளும் மனித உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்க உபரி காரணங்களாக இருக்கின்றன என்று கூறும் அவர் மேலும் சொல்கிறார்; ''தமிழகத்தில்தான் மிகச் சிறந்த அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இருக்கின்றன. அநேகமாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களின் அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இன்று உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை செய்ய முடியும்.

உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம், BSIP

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இந்த முன்னேற்றம் கிடையாது. உடல் உறுப்பு தான விழிப்புணர்வும் பரந்து பட்ட அளவில் இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் காணப்படுகிறது. சாலை விபத்துகளும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். அதுவும், அது ஒரு எதிர்வினை நிகழ்வாக (negative development) இருந்தாலும் உடல் உறுப்பு தானம் இந்தியாவிலேயே அதிகமாக நிகழும் மாநிலமாக தமிழகத்தை இன்று நிலை நிறுத்தியிருக்கிறது'' என்று மேலும் கூறினார் ரவீந்திரநாத்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, ஒரு முறை சென்னையில் மூளை சாவடைந்த ஒருவரது சிறுநீரகங்கள், இருதயம், கண்கள், மூன்று நோயாளிகளுக்கு பொறுத்தப்பட்டன. சென்னையின் மிகவும் அறியப்பட்ட ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்தது.

அப்பொழுது செய்தி சேகரிக்க அங்கு நான் சென்ற போது, குறிப்பிட்ட அந்த உடல் உறப்பு மாற்று சிகிச்சையை செய்த ஒரு டாக்டர் ஒரு தகவலை சொன்னார். அதாவது உடல் உறுப்பு தானத்தில் மிகவும் முக்கியமான பங்கு, இறந்த போன ஒருவரின் உடல் உறுப்புகளை வேறு ஒருவருக்கு பொறுத்த சம்மந்தப்பட்டவரின் உறவினர்களை சம்மதிக்க வைப்பது. இது மிக, மிக சவாலான காரியமாக இருக்கிறது என்று கூறினார்.

''நாங்கள் தயக்கத்துடன் சம்மந்தப்பபட்டவரின் உறவினர்களிடம் மெதுவாக பேசத் துவங்குவோம். அவர்களில் பலர் கடுங் கோபத்தில் எங்களுடன் பேசுவார்கள். சிலர் எங்களை கைகளை ஓங்கி அடித்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. நாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இறந்தவர்களின் உடலை கொடுத்து விடுவோம். ஆனால் சில மாதங்கள் கழித்து இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் எங்களிடம் வந்து, கை கூப்பி, கேவி அழுத சம்பவங்களையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார்.

அப்பொழுது அந்த மருத்துவர் வேறு ஒரு விஷயத்தையும் சொன்னார். இது போன்ற நேரங்களில் இறந்த நோயாளியின் உறவினர்களிடம் தன்மையாக எப்படி பேசுவது, எப்படி அவர்களது சம்மதத்தை பெறுவது என்பதை விஞ்ஞான ரீதியில் அணுக முடிவு செய்துதான் அதற்கான படிப்புகள் (courses) தொங்கப்பட்டன. அந்தப் பணியை மேற்கொள்பவர்களை ஆங்கிலத்தில் 'Grief Councillor' என்று சொல்லுவார்கள். அதாவது சம்மந்தப்பட்டவரின் மன நிலையை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, அவர்களை உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதிக்க வைப்பது.

ஆனால் இன்று அந்த விஷயம் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தளவுக்கு இன்று ஒரு சவாலாக இல்லை என்று தற்போது நான் பேசிய சில மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். காரணம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்களிடம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்திருப்பதுதான் என்கிறார்கள். பள்ளிகளில் கூட இன்று உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்தான்.

உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம், BSIP

வெளிநாட்டினரை பொறுத்த வரையில் இந்தியாவில் அவர்கள் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு தானத்திற்கு வந்தால் இந்திய சட்டங்களின் நிலைப்பாடு இதுதான்; ''ஒரு வெளிநாட்டினர் இந்தியாவில் ஒருவருக்கு, பிறப்பால் இந்தியரான ஒருவருக்கு தன்னுடையை உடல் உறுப்பை கொடுக்க விரும்பினால் (donor) அதனை பெறுபவர் (recipient) அந்த வெளிநாட்டினரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அதே போல ஒரு இந்தியர் ஒரு வெளிநாட்டினருக்கு தன்னுடைய ஒரு உடல் உறுப்பை கொடுக்க விரும்பினால் அதனை பெறுபவர் சம்மந்தப்பட்ட இந்தியரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உடல் உறுப்பு தானம் அனுமதிக்கப்படாது.

இரண்டு வெளிநாட்டினர் இந்தியா வந்து, அதில் ஒருவர் இன்னொருவருக்கு உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பினால் சட்டத்தின் படி அது அனுமதிக்கப்படும். ஆனால் அந்த சம்மந்தப்பட்ட வெளிநாட்டினரின், அதாவது (donor) எந்த நாட்டை சேர்ந்தவரோ, இந்தியாவில் உள்ள அந்த குறிப்பிட்ட நாட்டின் தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அதற்கு சான்றிதழ் கொடுக்க வேண்டும். அதாவது உடல் உறுப்பு தானம் செய்பவருக்கும், அதனை பெறுபவருக்குமான உறவு முறையை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட நாட்டின் தூதரக அதிகாரி அதனை தெளிவாக குறிப்பிட்டு சான்றிதழ் கொடுக்க வேண்டும். அப்போது தான் சம்மந்தப்பட்ட வெளிநாட்டினருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை நடக்கும்.

உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம், Pacific Press

உடல் உறுப்பு தானத்தில் இன்று உலகில் முதல் இடத்தில் இருப்பது ஸ்பெயின் நாடு. அங்கு இருக்கும் நிலைமை வித்தியாசமானது. ஒருவர் சாலை விபத்தில் இறந்து போகிறார் என்றால், மருத்துவமனையிலேயே தானாகவே அங்கேயே அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொறுத்தப்பட்டு விடுகின்றன.

இதற்காக ஸ்பெயினில் இயற்றப்பட்ட சட்டம் என்ன சொல்கிறது என்றால், ஒருவர் தான் இறந்த பிறகு தன்னுடைய உடல் உறுப்புகளை என்ன செய்வது என்று ஏதும் எழுத்து பூர்வமாக தெரிவிக்காமல் இறந்து விட்டால், அதனது பொருள் அவர் உடல் உறுப்பு தானத்திற்கு எதிர்ப்பு தெரிக்கவில்லை என்று பொருள் என்று கூறுகிறது. இருந்த போதிலும் சம்மந்தப்பட்டவர் உறுப்பு தானம் பற்றி ஏதும் சொல்லாமல் இறந்து போயிருந்தாலும் கூட அவரது உறவினர்களிடம் கருத்து கேட்கப்படும். அவர்கள் தாங்கள் அந்த உறுப்பு தானத்திற்கு சம்மதிக்க மாட்டோம் என்று கூறினால், இறந்தவரின் உடல் உறுப்புகள் எடுக்கப்பட மாட்டாது.

என்னுடைய உடல் உறுப்புகள் யாருக்கும் பொறுத்தப்படக்கூடாது என்று சம்மந்தப்பட்ட நபர் சட்ட ரீதியாக தெரிவித்திருந்தால் அவரது உடல் உறுப்புகள் அவரது இறப்புக்குப் பின் எடுக்கப்படாது. ஸ்பெயினில் பத்து லட்சம் பேருக்கு 39.7 பேர் ஆண்டு தோறும் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். 2015-ஆம் ஆண்டின் புள்ளி விவரம் இது. தற்போது வரையில் இதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இந்தியாவில் இது பத்து லட்சம் பேரில் 0.34 பேராக தற்போது இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: